search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை ஐகோட்டு"

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கப்படுமா? என்பது குறித்து 20-ந் தேதி ஐகோர்ட்டு முடிவு செய்கிறது.
    மதுரை:

    ‘மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்தார். கமலின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    கமலுக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன. திருப்பரங்குன்றத்தில் அவர் பேசியபோது செருப்பு வீச்சும் நடந்தது.

    இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கமல் மீது புகார் செய்தார். இதன் அடிப்படையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியது என 2 பிரிவுகளில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



    இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிடக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் கமல்ஹாசன் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்க மறுத்த ஐகோர்ட்டு, முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் விடுமுறை கால அமர்வில் விசாரிக்கலாம் என தெரிவித்தது.

    இதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

    மேலும் தேர்தல் முடியும் வரை கமலின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விவாதிக்கக்கூடாது என்றும் கூறினார்.

    இந்த நிலையில் வருகிற 20-ந் தேதி மதுரை ஐகோர்ட்டில் நடைபெற உள்ள வழக்குகளின் பட்டியலில் கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனு வழக்கும் இடம் பெற்றுள்ளது.

    எனவே அவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது நாளை மறுநாள் தெரியவரும்.

    ×